Sunday, October 12, 2008

நாகரீகம்

நாகரீக மாற்றங்கள் என்பது இயல்பான ஒரு நிகழ்வுதான்...... அதே சமயத்தில் நமக்கென்று இருக்கும் சில கலாசார அடையாளங்களை தொலைத்து விடவும் கூடாது..... என் தந்தை சிறு வயதில் பார்த்த நிகழ்வுகள் அவரது ஐம்பது வயது வரையிலும் மாறவில்லை. அவர் வாழ்ந்த ஊர், அவரது வயல், உறவினர்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், திருவிழாக்கள் என எதுவுமே மாறவில்லை. ஆனால் நான் பதினைந்து வயதில் பார்த்த பல விஷயங்களை இன்று காண முடியவில்லை. மனிதன் எதற்கெல்லாமோ ஏங்க வேண்டியதாகி விட்டது. எனது சொந்த கிராமத்திற்கு இப்போது சென்று பார்த்தால் எனக்கே அடையாளம் தெரிய வில்லை. மனிதர்களுக்கு மட்டும் இயற்கையை அழிப்பதென்றால் அவ்வளவு சந்தோஷம். நான் விளையாண்ட இடங்களை காணவில்லை. எல்லாம் கட்டிடங்களாகி விட்டது. பள்ளியை சுற்றி இருந்த மரங்களை காணவில்லை. புதிதாக கட்டிடங்கள் முளைத்து இருந்தன. புதிய கட்டிடங்களுக்காக சந்தோஷ படுவதா இல்லை இல்லாத மரங்களை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. நாங்கள் குதித்து விளையாண்ட செங்குளம், உப்பு குளம், வால்செட்டி குளம் என எதிலும் விளையாட சிறுவர்களை காணோம். வருடம் தோறும் என் அம்மாவின் ஊரில் திருவிழா நடக்கும். திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்னதாகவே மாமா, பெரியப்பா, அத்தை என ஊரிலிருந்து ஒவ்வொருவரிடமாக இருந்து கடிதங்கள் வர ஆரம்பிக்கும். திருவிழாவுக்கு இரண்டு நாள் முன்பே சென்று விடுவோம். ஒரே தடபுடலான வரவேற்பாக இருக்கும். ஊரிலிருக்கும் அந்த நான்கைந்து நாட்களுக்கும் நான் ராஜாதான். யாரும் வாட போட என்று கூட சொல்ல மாட்டார்கள். எல்லோரிடமும் இருந்து "கார்த்திப்பா", "என்சீமான்", "எஞ்சாமி எப்ப வந்துச்சு", "என்ன பெத்த மக்கா" என ஒரே செல்லமான குரல்களைத்தான் கேட்க முடியும். என் அம்மாவின் ஊரை சுற்றிலும் மலைகளும் தென்னந்தோப்புகளுமாக அதுவும் ஒரு சொர்க்கம்தான். அந்த தென்னந்தோப்புகளுக்கிடையே ஓடும் ஒரு குட்டி ஆறுதான் எனக்கு தெரிந்த வற்றாத ஜீவநதி. நான் கங்கை, மஹாநதி என எதையும் பார்த்ததில்லை ஆனால் இந்த சிற்றாற்றில் தண்ணீர் வற்றி நான் பார்த்ததில்லை. உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கைமுறை இந்த ஊர் மக்கள் வாழும் முறைதான். பெண்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து விடுவார்கள். அனைத்து வீடுகளிலும் வாசல் தெளித்து அழகான பின்னல் கோலங்கள் போடப்பட்டிருக்கும். கோலங்களில் நேர் புள்ளி வைத்து கோலம் போடுவதை விடு ஊடு புள்ளிகள் வைத்து பின்னல் கோலங்கள் போடுவதுதான் கடினம். ஒவ்வொரு கோலங்களும் நேர்த்தியான செம்மண் சாறு மொழுகிய எல்லைகளுடன் நடுவில் ஒரு பூசணி பூவை சொருகி வைத்து ரம்மியமாக கட்டும். ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் தோப்புக்கு செல்வார்கள். செல்லும் முன்பு அங்கிருக்கும் கடைகளில் அவர்களுக்கு பழக்கமான/பிடித்தமான கடைகளில் டீ அல்லது பருத்தி பால் அருந்தி விட்டு தோப்புக்கு செல்வார்கள். முதலில் காலை கடன் முடியும் பின்பு வேப்பங்குச்சியில் பல் துலக்கல். வேப்பங்குச்சியில் பல் துலக்குவதென்பது முதலில் சற்று கடினம் ஆனால் பழகி விட்டால் அதையே அனுபவித்து செய்யலாம். மேலும் வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பித்தம், வாய் நாற்றம், பூச்சி பல் எதுவும் வராது. எனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாக தெரியாது.... எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அங்கு குளிப்பதுதான். அங்கு பெரும்பாலும் ஆற்றில் அல்லது கிணற்றில் குளிப்பார்கள். நானும் கலையில் எழுந்தவுடன் என் மாமாவுடன் கிளம்பி குளிக்க சென்று விடுவேன். என் மாமா மற்றும் மூன்று சித்தப்பாக்கள் இணைபிரியாத நண்பர்கள் [அப்பொழுது]. அவர்கள் அவரவர் பொடிசுகளுடன் தோப்புக்கு வந்துவிட எனக்கு ஒரே கொண்டாட்டம். பெரியவர்கள் எல்லோரும் கிணற்றில் இறங்கி கொண்டு எங்களை குதிக்க சொல்வார்கள். பயமாக இருந்தாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்று திகிலும் உற்சாகமும் கலந்த மன நிலையோடு உள்ளே குதிப்போம். அங்கு கற்ற இந்த நீச்சல் இன்றும் என் வாழ்வில் எனக்கு பேருதவியாக உள்ளது. அதன் பின்பு தோப்பில் வேலை செய்பவர்களை அழைத்து என் மாமா இளநீர் பறித்து போட சொல்லுவார். அங்கு ஒன்று இரண்டு என்று கணக்கெல்லாம் கிடையாது. வயிற்றில் இடம் இருக்கும் வரை குடிக்கலாம். அதன் பின் அதே உற்சாகத்துடன் வீட்டுக்கு நடந்து வந்தால் அங்கு தயாராக இருக்கும் காலை உணவை பற்றி எளிதில் கூறிவிட முடியாது. நெய் வடிய பதமான பொங்கல், கேசரி, இட்லி, நெய் தோசை, இனிப்பு பணியாரம், கார பணியாரம், உளுந்த வடை, வெண்ணிறமாக தேங்காய் சட்னி, [தேங்காய் சட்னியில் தேங்காய் அதிகமும் பச்சை மிளகையும் போட்டு அரைத்தால் வெண்ணிறமாக இருக்கும் மேலும் அதன் சுவையே தனி], தக்காளி+வெங்காயம்+வேர்க்கடலை இவற்றை வதக்கி அரைத்த தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, பாசிப்பருப்பு சாம்பார், இட்லி பொடி, தேன் இவை மட்டும்தான் காலை உணவு. இவற்றில் அனைத்திலும் ஒன்றாவது உண்டாக வேண்டும். இல்லையென்றால் திட்டு என் அம்மாவுக்கு விழும். பிள்ளையை இப்படியா சாப்பிடாமல் வளர்ப்பதென்று. இப்படி இன்னும் பல விஷயங்களை கூறி கொண்டே போகலாம். இன்னும் மனதில் ஆழமாக பதிந்து வெறும் நினைவுகளாக மட்டுமே இருக்கிறது. இப்பொழுதெல்லாம் இவற்றை நிஜத்தில் பார்க்கமுடியவில்லை. இரண்டு வருடன் முன்பு அதே திருவிழாவிற்கு சென்றிருந்தேன். முன்பு இருந்த எதையும் காணவில்லை. மக்களையும்தான்...... அந்த ஊர் மக்களே பலர் வரவில்லை. பெரும்பாலோனோர் இயந்திரத்தனமான நகர வாழ்க்கையில் சிக்கி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயம் கொள்ள தேவையில்லை. திருவிழா வெறுமனே முடிந்த சோகத்தோடு மீண்டும் சென்னை திரும்பினேன். காலையில் கிண்டி கத்திபாராவில் இறங்கினேன். காலை ஏழு மணிக்கெல்லாம் சாலையில், பேருந்துக்குள், வாகனங்களில், பேருந்து நிறுத்தங்களில் என திருவிழா கூட்டமாய் மக்கள். எனக்கு எரிச்சலாக வந்தது. எல்லோரும் உங்கள் ஊர்களுக்கு பொய் தொலையுங்களேன் என்று. அங்கு திருவிழா நாட்களில் கூட கொண்டாட கூட்டம் இல்லை. இங்க சாதாரணமான நாளில் கூட திருவிழா போல் எங்கும் கூட்டம். இப்பொழுதெல்லாம் நகரத்து மக்கள் கூட்டங்களை பார்க்கும் பொழுது கோபம்தான் வருகிறது...........

1 comment:

Unknown said...

நல்லா இருக்குடா !!!!
//நான் கங்கை, மஹாநதி என எதையும் பார்த்ததில்லை//
டை ஸ்கூல் ல கங்காவ நீ பாக்கல?
மஹாநதி படம்?