Sunday, November 23, 2008

மாமுவின் மினி ப்ராஜெக்ட்

அது மூன்றாம் செமெஸ்டர் ஆரம்பித்த நேரம். எல்லோரும் ஒரு மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் மேலும் அதற்கான அறிவிப்புகள் மற்றும் யாருக்கு யார் கைடு என்பது முதலான விவரங்கள் வந்து விட்டன. எல்லோரும் இன்னும் மூன்று நாட்களுக்குள் தலைப்புகள் கொடுத்தாக வேண்டும். எல்லோரும் மண்டையை பிய்த்து கொண்டிருந்தோம்.

வழக்கமான பாய் டீ கடை:

"மாமு மினி ப்ராஜெக்ட் டைட்டில் ரெடி பண்ணிடியாடா?" இது கார்த்தி.

"இல்லடா...... எதுல பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்...... ரிச்சர்ட் நீங்க எதுல பண்ண போறீங்க? " மாமு நக்கலாக கேட்டான்.

"கம்பியூடர்லதான்"..... சொல்லி விட்டு ரிச்சர்ட் டீ குடிப்பதை தொடர்ந்தான். எல்லோரும் சிரிப்பை அடக்க ரொம்ப கஷ்டப்பட்ட நேரத்தில் மாமு சொன்னான்,

"ஒ! காமெடியா.... நாளைக்கு டைம் இருந்தா மார்னிங் எட்டு மணிக்கு சிரிக்கிறேன்! "
இப்போது சிரிப்பு வரவில்லை...... ஆனால் முன்பு அடக்கிய சிரிப்பு இப்போது நன்றாக வெளிவந்தது....... பாவம் அப்பாவி மாமு வழக்கம் போல் நம்முடைய காமெடிக்குதான் எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று நினைத்தவாறே எல்லாரையும் மிகவும் பந்தாவாக சுற்றி பார்த்தான். இப்போது சிரிப்பு மிக அதிகமானது. ஆனால் மாமுவுக்கு தெரிய வில்லை அவனது ரியாக்சானுக்குதான் இந்த சிரிப்பு என்று.

மாமு மேலும் ஸ்டைலாக கார்த்தியை பார்த்து சொன்னான் "பெரிய சிட்டிசன் அஜித்..... ஹா ஹா ஹா நு சிரிக்கிறாரு" ...... ஆனால் இப்போது இன்னும் அதிகமானது சிரிப்பு.

நான் சிரிக்காமல் கேட்டேன்.... எனென்றால் நான் மிகவும் நல்லவன் அவர்களை போல் இல்லை என்பதும் மாமுவின் எண்ணம். "மாமு எப்டிடா உன்னால மட்டும் இப்டி பஞ்ச் அடிக்க முடியுது? "

கார்த்தி அதாண்டா திருமலைல விஜய் சொல்லுவான்..... "பூமி ஒரு வட்டம்.... இங்க இன்னைக்கு ஒருத்தன் ஜெயிப்பான்..... நாளைக்கு ஒருத்தன் ஜெயிப்பான்... இத நீ இன்னும் புரிஞ்சுகல...... உனக்கு கூடிய சீக்கிரம் புரிய வைக்கிறேன்" நு சொல்வான்ல அப்டித்தான் அவன் பஞ்ச் அடிச்சான் நான் அவனுக்கு டின்ச் குடுத்தேன்.

"இது திருமலை விஜய் டயலாக் இல்ல.... கருமலை அஜய் டயலாக்...... திருமலைல இப்டி ஒரு டயலாக் இருக்கது விஜய்க்கே தெரியாது" இது வசந்த்.

"டாபிக் மாத்தாதீங்கடா..... மாமு உன்கிட்ட என்ன கேட்டோம்.... மினி ப்ரோஜெக்ட்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியா......." கார்த்தி கேட்டான்.

"ரெடி பண்ணிட்டே இருக்கேன்"........

இதன் பின் பலநாள் மாமு கம்ப்யூட்டர் லேபில் வேட்டியாயகத்தான் உக்கார்ந்து இருந்தான். திடீரென்று மாமுவின் சிஸ்டத்தில் ஒரு நாள் ப்ராஜெக்ட் ரன் பண்ணி காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். பின்புதான் தெரிய வந்தது எங்கள் கம்ப்யூட்டர் லேப் அட்மினுடைய சென்டெரில் பீஸ் கட்டி ப்ராஜெக்ட் பண்ணியதால் அவனுடைய ப்ரொஜெக்டை அவர் உதவியுடன் நேரடியாக லேபில் உள்ள அவனுடைய கம்ப்யூட்டரில் ஏற்றி விட்டான். இதே போல் பண்ணிய பலரில் ஒருவர் மூலமாக எங்களுக்கு இது தெரிய வந்தது.

அடுத்த நாள் லேபில் மாமுவிடம் கேட்டோம், "மாமு ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ணிட்டியா?".......... மாமு பதில் சொல்லாமல் நேரடியாக ப்ரொஜெக்டை ரன் பண்ணி காண்பித்தான். எங்களுக்கு தெரியும் அது மாமு பண்ணவில்லை என.
ஆனால் மாமு சின்சியராக ஏதோ செய்து கொண்டிருந்தான். என்னவென்று பார்த்தால் வி.பி யில் டைமரை இழுத்து பெரிதாக்கி பார்த்தான். என்னடா என்று கேட்ட பொழுது "பார்த்தா தெரில..... டைமரை பெருசாக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லி விட்டு வேலையே தொடர்ந்தான். பாவம் அப்பாவி மாமுவுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை டைமரை பெரிதாக்க முடியாது என..........

Monday, October 27, 2008

மாமு கதைகள்

ரிச்சர்ட், அருண், கார்த்தி, லாரன்ஸ், ஹேமந்த், வசந்த் இது எங்கள் கல்லூரி நண்பர் குழு. இதில் "மாமு" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் லாரன்ஸ் அடித்த கூத்துகளை பட்டியலிடலாம். அதில் ஒன்று உங்களுக்காக...........

மதியம் ஒரு மணி..... கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பாய் கடை..... நாங்கள் அனைவரும் அங்கே ஆஜர்...

"பாய் ஒரு டீ" இது ஹேமந்த்.

என்னடா மாமு இப்பல்லாம் ஏரியாவுல எதுவும் பிரச்சனைகளுக்கு போறதில்லயாடா? இது நான்.

"இல்லடா.... கடைசியா ஒருத்தன் மூஞ்சிய ஒடச்சது... அதுக்கப்புறம் பிரச்சனைகளுக்கெல்லாம் போறதில்ல....." இதான் மாமு......

ரிச்சர்ட், அருண், கார்த்தி அனைவரும் சிரிப்பை அடக்க முயல்வதை பார்த்து ஹேமந்த் சிரிக்க...... சிரிப்பு தாளாமல் ஹேமந்த் கையிலிருந்த டீ அருகில் இருந்தவர் மேல் ஊற்றி விட்டது..... அவர் பக்கத்து கடைக்காரர்தான்..... கோபமாய் ஹெமந்த்தை பார்த்து கேட்டார் "அறிவு இல்ல.... இப்டித்தான் கண்ணு மண்ணு தெரியாம திரிவீங்கலடா?".

அன்று பார்த்து ஹேமந்த் கோபபட்டு விட்டான்...... "யோவ் அதான் சாரி சொல்றோம்ல.... அப்புறம் என்ன எகிர்ற?".

அவர் ஒரு படி மேலே மேலே போய் ....."சாரி சொன்ன...... பாடு..... என்னடா சௌன்ட் விடுற? பன்றதையும் பண்ணிட்டு என்னை பார்த்தா எகிர்ரனு கேக்குற? "

ஹேமந்த் எழுந்து விட்டான்.... நாங்கள் எல்லாம் பதறி போய் இருவரையும் தடுத்தோம்...... "ஏரியால இருக்க மாட்ட" என்று பக்கத்து கடைகாரர் மேலும் சத்தம் போட..... ஹேமந்த் சொன்னான் "சாயங்காலம் பாக்கலாம் யாரு இருப்ப இருக்க மாட்டான்னு" என்று பதிலுக்கு பேச..... ஒரு வழியாக நாங்கள் சமாதான படுத்தி அழைத்து வந்தோம்.....

திரும்பி வரும் போது கார்த்தி கேட்டான் மாமுவிடம்.... "ஏன்டா மாமு பேசாமல் வந்துட்ட..... நீ இருக்கும் போதே எரிய கீரியானு பேசுறான்...... பேசாம விட்டுட்டு வந்துட்ட".....

இதற்கு மாமுவின் பதில் "ஒரு போன் போதும்.... ஆளே இல்லாம போய்டுவான்..... அது மேட்டர் இல்ல".....

"அப்பறம் என்ன போன் பண்ண காசு இல்லையா?" கார்த்தியின் வழக்கமான நக்கல் கேள்வி..... ஆனால் இதை அறியாத அப்பாவி மாமு வழக்கம் போல் சீரியசாக பதில் சொன்னான் "காமெடியா...... போலீஸ் கேஸ் ஆகிரும்னு பார்த்தேன்...... இல்லைனா ஒரு போன் போதும்.... ஆளே இருக்க மாட்டான்".

ஒரு வழியாக வகுப்பிற்கு வந்தோம்...... ஆனால் ஹேமந்த் வரவே இல்லை......
அவனும் லோக்கல் ஏரியா தான்..... அதனால் அவனுக்கு தெரிந்தவர்களை கூப்பிட சென்று விட்டான்.... ஆனால் இந்த விவரம் எங்களுக்கு தெரிய வில்லை....

மாலை ஐந்து மணி. வழக்கமான கல்லூரி தேநீர் இடைவேளை. நாங்களும் வழக்கமான பாய் கடையில் டீ, வடை, சமொசாக்களுடன்.........

பக்கத்து கடைகாரரும் வந்திருந்தார்...... எங்களை முறைத்தவாரே டீ குடித்து கொண்டிருந்தார்..... அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது..... திடீரென ஹேமந்த் அவனது லோக்கல் நண்பர்கள் நான்கைந்து பேருடன் வந்திறங்கினான்...... அனைவரும் பக்கத்து கடைக்காரரை ரவுண்டு கட்டி சத்தம் போட தொடங்கினர்........
கண்டிப்பாக சண்டை வந்துவிடும் போல தெரிந்தவுடன் கட்யிலிருந்த பலர் வெளியேறி விட்டனர்...... பாவம் பாய் அந்த களேபரத்திலும் எங்களுக்கு அறிவுரை சொல்லி கொண்டிருந்தார்...... ஒரு வழியாக கஷ்டப்பட்டு சண்டையை தடுத்து விட்டோம்..... அப்போதுதான் கவனித்தால் கூட்டத்தில் மாமு இல்லை...... எஸ்கேப்....
எங்கே என்று பார்த்தால் ரோட்டுக்கு எதிர்ப்புறம் சென்று நின்றிருந்தான்.

எங்களை பார்த்து "கிளாஸ் டைம் ஆகிடுச்சு.... வரலையா?" என்று கேட்டு விறு விறுவென நடந்து சென்று விட்டான் மாமு.

அடுத்த நாள் மாலை நான் லாஸ்ட் கிளாஸ் கட் அடித்து விட்டு வந்து பாய் கடையில் அமர்ந்தேன்....... பாய் வழக்கம் போல் அறிவுரை சொல்லியவர் டீ போட்டு குடுத்தார்..... "வீட்ல எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வக்கிறாங்க..... நீங்க என்னடான்னா கிளாஸ் கட் அடிச்சுட்டு இங்க வந்து வெட்டியா உக்காந்து இருக்குறீங்க"........ பாய் சொல்வதில் ஐம்பது சதவீதம் கேட்டிருந்தால் கூட நாங்கள் வாழ்வில் இன்னும் பெரிய இடத்தில் இருந்திருப்போம்......பாவம் பிழைக்க தெரியாத பாய்..... பக்கத்து கடைக்காரரை போல் கூட்டம் சேர்க்க தெரிய வில்லை.... பெரிய ஸ்பீக்கர் வைத்து அஜித்/விஜய் பாடல்கள் போட தெரியவில்லை.......

அப்போதுதான் அங்கு வந்தான் மாமு...... அவனும் கட் அடித்து விட்டான் போல......

நான் மெதுவாக கேட்டேன் "என்னடா மாமு..... ஏரியால பெரிய ரவுடிங்குற..... ஈவ்னிங் ப்ரேக்ல அவ்ளோ பெரிய கலவரம் நடக்குது நீ பாட்டுக்கு பேசாம கிளாஸ் போறேன் போய்ட்ட....."

மாமு ஸ்டைலாக திரும்பி பதில் சொன்னான் "வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேச கூடாது ஒ.கே வா...... இன்னைக்கு மத்தியானம் பக்கத்து கடைகாரரும் பத்து பேரை கூட்டிட்டு வந்தார்..... நீங்க யாருமில்லை..... நான்தான் பேசி அனுப்பி வச்சேன்......"

தொடரும்..........

Wednesday, October 15, 2008

தனியா எங்கே போனாளோ? -- சமீபத்திய பாதிப்பு

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.

அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.

Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.

"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.

"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.

"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"

"தேங்க்ஸ் சரவ்"

"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"

" "

"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"

" "

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"அப்படியெல்லாம் இல்லை சரவ்"

"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"

வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.

9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்

செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.

அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"

"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"

அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.

"சரி கைய நீட்டு"

கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.

"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"

கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.

ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.

"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"

அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.

"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"

அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.

" "

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"

அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.

அடுத்த நாள்.

ஆங்கில வகுப்பு

"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"

முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.

"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"

முறைத்து கொண்டே சென்றான் சிவா.

"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"

வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"

"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.

"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"

அமைதியாக இருந்தாள்.

"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.

"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"

"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"

"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"

அவள் கை சிவந்திருந்தது.

"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"

அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.

அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"

அவள் அழுது கொண்டே இருந்தாள்.

"இப்ப சொல்றயா இல்லையா?"

"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"

"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"

"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"

"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.

"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"

"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"

"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"

"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."

"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"

"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"

அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.

அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.

ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.

"என்னப்பா? யாரு வேணும்"

"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"

"ஆமாம். நீ யாருப்பா?"

"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"

"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"

"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.

"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"

"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"

அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.

"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"

"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"

"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"

"நான் சிகப்பு மனிதன் சார்"

"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"

" "

"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"

அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.

சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.

கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"

"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"

"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"

ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.

"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.

கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.

"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"

"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"

"இது உன் நம்பர் தானே 973654662"

"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"

"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"

கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"

மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.

................

"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.

..............

"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"

"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"

வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...

Sunday, October 12, 2008

நாகரீகம்

நாகரீக மாற்றங்கள் என்பது இயல்பான ஒரு நிகழ்வுதான்...... அதே சமயத்தில் நமக்கென்று இருக்கும் சில கலாசார அடையாளங்களை தொலைத்து விடவும் கூடாது..... என் தந்தை சிறு வயதில் பார்த்த நிகழ்வுகள் அவரது ஐம்பது வயது வரையிலும் மாறவில்லை. அவர் வாழ்ந்த ஊர், அவரது வயல், உறவினர்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், திருவிழாக்கள் என எதுவுமே மாறவில்லை. ஆனால் நான் பதினைந்து வயதில் பார்த்த பல விஷயங்களை இன்று காண முடியவில்லை. மனிதன் எதற்கெல்லாமோ ஏங்க வேண்டியதாகி விட்டது. எனது சொந்த கிராமத்திற்கு இப்போது சென்று பார்த்தால் எனக்கே அடையாளம் தெரிய வில்லை. மனிதர்களுக்கு மட்டும் இயற்கையை அழிப்பதென்றால் அவ்வளவு சந்தோஷம். நான் விளையாண்ட இடங்களை காணவில்லை. எல்லாம் கட்டிடங்களாகி விட்டது. பள்ளியை சுற்றி இருந்த மரங்களை காணவில்லை. புதிதாக கட்டிடங்கள் முளைத்து இருந்தன. புதிய கட்டிடங்களுக்காக சந்தோஷ படுவதா இல்லை இல்லாத மரங்களை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. நாங்கள் குதித்து விளையாண்ட செங்குளம், உப்பு குளம், வால்செட்டி குளம் என எதிலும் விளையாட சிறுவர்களை காணோம். வருடம் தோறும் என் அம்மாவின் ஊரில் திருவிழா நடக்கும். திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்னதாகவே மாமா, பெரியப்பா, அத்தை என ஊரிலிருந்து ஒவ்வொருவரிடமாக இருந்து கடிதங்கள் வர ஆரம்பிக்கும். திருவிழாவுக்கு இரண்டு நாள் முன்பே சென்று விடுவோம். ஒரே தடபுடலான வரவேற்பாக இருக்கும். ஊரிலிருக்கும் அந்த நான்கைந்து நாட்களுக்கும் நான் ராஜாதான். யாரும் வாட போட என்று கூட சொல்ல மாட்டார்கள். எல்லோரிடமும் இருந்து "கார்த்திப்பா", "என்சீமான்", "எஞ்சாமி எப்ப வந்துச்சு", "என்ன பெத்த மக்கா" என ஒரே செல்லமான குரல்களைத்தான் கேட்க முடியும். என் அம்மாவின் ஊரை சுற்றிலும் மலைகளும் தென்னந்தோப்புகளுமாக அதுவும் ஒரு சொர்க்கம்தான். அந்த தென்னந்தோப்புகளுக்கிடையே ஓடும் ஒரு குட்டி ஆறுதான் எனக்கு தெரிந்த வற்றாத ஜீவநதி. நான் கங்கை, மஹாநதி என எதையும் பார்த்ததில்லை ஆனால் இந்த சிற்றாற்றில் தண்ணீர் வற்றி நான் பார்த்ததில்லை. உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கைமுறை இந்த ஊர் மக்கள் வாழும் முறைதான். பெண்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து விடுவார்கள். அனைத்து வீடுகளிலும் வாசல் தெளித்து அழகான பின்னல் கோலங்கள் போடப்பட்டிருக்கும். கோலங்களில் நேர் புள்ளி வைத்து கோலம் போடுவதை விடு ஊடு புள்ளிகள் வைத்து பின்னல் கோலங்கள் போடுவதுதான் கடினம். ஒவ்வொரு கோலங்களும் நேர்த்தியான செம்மண் சாறு மொழுகிய எல்லைகளுடன் நடுவில் ஒரு பூசணி பூவை சொருகி வைத்து ரம்மியமாக கட்டும். ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் தோப்புக்கு செல்வார்கள். செல்லும் முன்பு அங்கிருக்கும் கடைகளில் அவர்களுக்கு பழக்கமான/பிடித்தமான கடைகளில் டீ அல்லது பருத்தி பால் அருந்தி விட்டு தோப்புக்கு செல்வார்கள். முதலில் காலை கடன் முடியும் பின்பு வேப்பங்குச்சியில் பல் துலக்கல். வேப்பங்குச்சியில் பல் துலக்குவதென்பது முதலில் சற்று கடினம் ஆனால் பழகி விட்டால் அதையே அனுபவித்து செய்யலாம். மேலும் வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பித்தம், வாய் நாற்றம், பூச்சி பல் எதுவும் வராது. எனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாக தெரியாது.... எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அங்கு குளிப்பதுதான். அங்கு பெரும்பாலும் ஆற்றில் அல்லது கிணற்றில் குளிப்பார்கள். நானும் கலையில் எழுந்தவுடன் என் மாமாவுடன் கிளம்பி குளிக்க சென்று விடுவேன். என் மாமா மற்றும் மூன்று சித்தப்பாக்கள் இணைபிரியாத நண்பர்கள் [அப்பொழுது]. அவர்கள் அவரவர் பொடிசுகளுடன் தோப்புக்கு வந்துவிட எனக்கு ஒரே கொண்டாட்டம். பெரியவர்கள் எல்லோரும் கிணற்றில் இறங்கி கொண்டு எங்களை குதிக்க சொல்வார்கள். பயமாக இருந்தாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்று திகிலும் உற்சாகமும் கலந்த மன நிலையோடு உள்ளே குதிப்போம். அங்கு கற்ற இந்த நீச்சல் இன்றும் என் வாழ்வில் எனக்கு பேருதவியாக உள்ளது. அதன் பின்பு தோப்பில் வேலை செய்பவர்களை அழைத்து என் மாமா இளநீர் பறித்து போட சொல்லுவார். அங்கு ஒன்று இரண்டு என்று கணக்கெல்லாம் கிடையாது. வயிற்றில் இடம் இருக்கும் வரை குடிக்கலாம். அதன் பின் அதே உற்சாகத்துடன் வீட்டுக்கு நடந்து வந்தால் அங்கு தயாராக இருக்கும் காலை உணவை பற்றி எளிதில் கூறிவிட முடியாது. நெய் வடிய பதமான பொங்கல், கேசரி, இட்லி, நெய் தோசை, இனிப்பு பணியாரம், கார பணியாரம், உளுந்த வடை, வெண்ணிறமாக தேங்காய் சட்னி, [தேங்காய் சட்னியில் தேங்காய் அதிகமும் பச்சை மிளகையும் போட்டு அரைத்தால் வெண்ணிறமாக இருக்கும் மேலும் அதன் சுவையே தனி], தக்காளி+வெங்காயம்+வேர்க்கடலை இவற்றை வதக்கி அரைத்த தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, பாசிப்பருப்பு சாம்பார், இட்லி பொடி, தேன் இவை மட்டும்தான் காலை உணவு. இவற்றில் அனைத்திலும் ஒன்றாவது உண்டாக வேண்டும். இல்லையென்றால் திட்டு என் அம்மாவுக்கு விழும். பிள்ளையை இப்படியா சாப்பிடாமல் வளர்ப்பதென்று. இப்படி இன்னும் பல விஷயங்களை கூறி கொண்டே போகலாம். இன்னும் மனதில் ஆழமாக பதிந்து வெறும் நினைவுகளாக மட்டுமே இருக்கிறது. இப்பொழுதெல்லாம் இவற்றை நிஜத்தில் பார்க்கமுடியவில்லை. இரண்டு வருடன் முன்பு அதே திருவிழாவிற்கு சென்றிருந்தேன். முன்பு இருந்த எதையும் காணவில்லை. மக்களையும்தான்...... அந்த ஊர் மக்களே பலர் வரவில்லை. பெரும்பாலோனோர் இயந்திரத்தனமான நகர வாழ்க்கையில் சிக்கி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயம் கொள்ள தேவையில்லை. திருவிழா வெறுமனே முடிந்த சோகத்தோடு மீண்டும் சென்னை திரும்பினேன். காலையில் கிண்டி கத்திபாராவில் இறங்கினேன். காலை ஏழு மணிக்கெல்லாம் சாலையில், பேருந்துக்குள், வாகனங்களில், பேருந்து நிறுத்தங்களில் என திருவிழா கூட்டமாய் மக்கள். எனக்கு எரிச்சலாக வந்தது. எல்லோரும் உங்கள் ஊர்களுக்கு பொய் தொலையுங்களேன் என்று. அங்கு திருவிழா நாட்களில் கூட கொண்டாட கூட்டம் இல்லை. இங்க சாதாரணமான நாளில் கூட திருவிழா போல் எங்கும் கூட்டம். இப்பொழுதெல்லாம் நகரத்து மக்கள் கூட்டங்களை பார்க்கும் பொழுது கோபம்தான் வருகிறது...........

Thursday, August 14, 2008

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு தமிழ் சிறுகதைகள் அடங்கிய பாடநூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கலாம் என எண்ணி ஆர்வமுடன் படிக்க தொடங்கினேன். அனைத்துமே அற்புதமான கதைகள், பெரும் நாவலாசிரியர்கள், தலைவர்கள் எழுதிய கதைகள். அதில் பல கதைகள் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை சுட்டி காடுவதாக இருந்தது. இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாடத்திட்டங்களை வைக்கும் இதே அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்கள்தான் அக்கதைகள். இதை படிக்கும் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களுக்கு இதன் பொருள் புரியுமா? இல்லை இதையும் மனப்பாடமாக படித்து எழுதிவிட்டு போவார்களா? இல்லை வழக்கம் போல் இதையும் படிக்காமல் விட்டு விடுவார்களா? இல்லை படித்து நாட்டை பற்றி கவலை கொள்வார்களா?

இதில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு உதாரணத்திற்கு ஒரு மாணவன் இதை ஆர்வமுடன் படித்து நாட்டை பற்றி கவலை கொள்கிறான் என்றால் பின்னாளில் அவன் இன்னும் பல நிகழ்வுகளை காணும்போது இன்னும் கவலை கொள்வான். ஆனால் மற்றவர்கள் அவனுக்கு அன்னியமாக படுவார்கள். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் தாமுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். இதில் கூட தவறில்லை. ஆனால் இன்னும் ஒரு புற மக்கள் தான் யாரென்று காட்ட வேண்டுமென்று வாழ்கிறார்கள். இன்னும் சிலர் யார் எக்கேடு கேட்டாலும் சரி நாம் நல்லபடியாக வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிறார்கள். இதையெல்லாம் விட கொடுமை முதலீடு இல்லாத தொழிலாக அரசியலை எண்ணி நாட்டையே குட்டி சுவராக்கி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

இவற்றின் விளைவுகள்தான்,
* மணல் கொள்ளை
* காடுகள் அழிப்பு
* லஞ்சம்/ ஊழல்
* அரசுடைமைகளை அழிப்பது
* கொலை/கொள்ளை

வைரமுத்து கவிதை போல "வானின் நீளம் கொண்டு வா! பேனா மையும் தீர்ந்திடும்" என்னும் அளவிருக்கு இந்த அக்கிரம/அநியாய பட்டியல் நீளும்.

இதன் மூலம் கூற வருவது ஒன்று மட்டும் தான். தயவு செய்து இது போன்ற கதைகளை பாட புத்தகத்தில் புகுத்தி அந்த ஒன்றிரண்டு மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி விட்டு பின்னாளில் அவர்கள் சமூகத்தின் மேல் கோபம் கொண்டு அக்கிரமங்களை தட்டி கேட்க முடியாமலும் அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாமலும் நொந்து நொந்து சாக வேண்டாம். இப்படி ஒரு பாடநூல் அவர்களுக்கு தேவையில்லை. சாதாரணமான இலக்கணமும் இலக்கிய கதைகளும் போதும்...........
அதுதான் அவர்களின் கற்பனையோடு நின்று போகும்........

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

Wednesday, August 13, 2008

இலவச பாட நூல்கள்

தமிழக அரசின் கல்வித்திட்டத்தின் படி இயங்கும் அனைத்து பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்குமான அனைத் பாடநூல்களும் கீழ்வரும் இணைப்பில் இலவசமாக உள்ளது. முடிந்தவரை மற்றவர்களுக்கு தெரியப் படுத்துங்கள். பலருக்கு இது உதவிகரமாக இருக்கலாம்.

இணைப்பு: http://www.textbooksonline.tn.nic.in/

மேலும் சென்னையிலுள்ள சில வெளி நாட்டு தூதரகங்களுக்கான இணைப்புகள் கீழ்வருமாறு:

அமெரிக்க தூதரகம்: http://chennai.usconsulate.gov/
சிங்கப்பூர் தூதரகம்: http://www.mfa.gov.sg/chennai/
ஜெர்மன் தூதரகம்: http://www.chennai.diplo.de/Vertretung/chennai/en/Startseite.html

Friday, March 14, 2008

பிரிவோம் சந்திப்போம்.........


ஒரு சில பிரிவுகளும் பிரிவின் பாதிப்பும் எளிதில் மறைந்து விடாது. அப்படி ஒரு பிரிவை பல வருடங்களுக்கு பின்பு இன்று சந்திக்க நேர்ந்தது. அது எங்கள் மேலாளர் திரு. கணேஷ் விருதகிரி அவர்களின் பிரிவு உபச்சார விழா. விழா என்று கூறுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் விழா என்பது கொண்டாட கூடிய ஒரு நிகழ்வு. வழக்கமான பிரிவு உபச்சார நிகழ்வை போல காணப்பட்டாலும் சில எதிர்பாராத ஆச்சரியங்களும் காத்திருந்தது. ஒவ்வொருவராக மேலாளரை பற்றி பேச பேச என் நினைவுகள் பின்னோக்கி சென்றவாறே இருந்தது. அவருடனான என் முதல் சந்திப்பு, நேர்காணல், ஆரம்ப கால நாட்கள் என நினைவுகளில் சிலாகித்து கொண்டிருந்தேன். திடீரென என் பெயரை யாரோ அழைப்பது போல் கேட்க நிஜவுலகிர்க்கு திரும்பினேன். வேறொன்றுமில்லை, இப்பொழுது என் முறை நான் பேச வேண்டும். நான் நிறைய பேசுவேன் எனினும் இப்பொழுது பேச இயலவில்லை. நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. அவருடனான என் நட்பு அவ்வளவு ஆழமானது, கொஞ்சம் வித்தியாசமானதும் கூட...... பொதுவாக நமக்கு பிடிக்காத சில விஷயங்கள் மற்றொருவரிடம் இருந்தால் நாம் அவர்களுடன் நட்போடு இருப்பது அரிது. அப்படியே இருந்தாலும் அது உண்மையான நட்பாக இருக்காது. ஆனால் எங்கள் நட்பு அவ்வாறு இல்லை....... சில விஷயங்களில் முரண்பட்டிருந்தாலும் அவற்றை விடுத்து எங்களுக்கு ஒத்து போகும் மாற்ற விஷயங்களில் ஒன்றாய் விவாதிப்போம். அப்பொழுதெல்லாம் எங்களுக்குள் இருக்கும் அந்த பிடிக்காத விஷயங்கள் நினைவில் வருவதே இல்லை..... இது அபூர்வம்தானே! இப்பொழுது மீண்டும் நிஜவுலகிருக்கு அழைக்கப்பட்டேன்........ நிறைய பேச ஆசையிருந்தும் பேச இயலாததால் "பொதுவாக எனக்கு கூட்டத்தில் அவ்வளவாக பேச வராது" என்று அப்பட்டமாக பொய் சொன்னேன். ஆனால் என் சினிமா கனவுகள் தெரிந்த என் நண்பர்கள் விடுவதாய் இல்லை, அவர்களுக்கு தெரியும் நான் பேச தயங்க மாட்டேன் என்று. ஒரு வழியாக பேசினேன்...... ஏதோ பேசினேன் என்றுதான் கூற வேண்டும். ஒரே ஒரு ஆறுதல் யாரும் கூறாத அவருடைய மனிதம் பற்றிய ஒரு விஷயத்தை கூறியது மட்டும்தான். ஆம்....... அவர் மக்களிடையே செத்து கிடக்கும் மனிதத்தை உயிர் பெற வைக்கும் ஆசை கொண்ட என்னை போன்ற மனிதர்களுள் ஒருவர். அது மட்டுமன்றி அவருடைய சரியான திட்டமிடுதல் அவருக்கே உரித்தான ஒரு திறமை. அவருடைய திட்டமிடுதலில் எனக்கு தெரிந்து எப்பொழுதும் தவறுகள் நேர்ந்ததில்லை. நான் பேசி முடிக்கும் வரை கேலியும் கூத்துமாக இருந்த எல்லோரும் என் சக பணியாளர் திரு.பாலகிருஷ்ணன் பேசும்பொழுது கூர்ந்து கவனித்தனர். பொதுவாக அவருக்கு சரியாக பேசவா தெளிவாக கூறவோ தெரியாது....... அவரை எல்லோரும் செய்த கிண்டல்கள் ஏராளம். ஆனால் அவருடைய இந்த்ற்றய பேச்சு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக தெளிவாகவும் அழகாகவும் தான் கூறவந்ததை சொல்லி முடித்தார். அவருடைய பேச்சுக்கு கைதட்டல் இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது ஆனால் இன்று அது கிடைத்தது. இப்பொழுது எங்களிடையே ஒரு வித அமைதி நிலவ தொடங்கியது. கேலியும், கூத்துக்களும் மறைய தொடங்கின. இப்பொழுது பேசியது தோழி ப்ரீதா....... அவள் பேசி முடிக்கும் பொழுது குரல் தழுதழுக்க எங்களிடையே ஒரு இறுக்கம் நிலவியது. நான் அந்த இறுக்கத்தை ரசித்து கொண்டிருந்தேன். அனைவரும் அவர்மேல் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடுதான் இந்த இறுக்கம் சூழ்ந்த அமைதி. கேலியும் கூத்துக்களும் காணாமல் போயிருந்தது இப்பொழுது. இறுதியாக அவர் பேசி முடிக்க, வழக்கமான பரிசளிப்புகளுடன் முடிந்தது.
மீண்டும் என் இருக்கைக்கு திரும்புகிறேன்..... ஆனால் அவர் இன்னும் வரவில்லை.... பொதுவாக எனக்கு பின்புறமாக நடந்து வந்து அவர் இருக்கைக்கு செல்வார்...... இன்று திரும்பி திரும்பி பார்க்கிறேன்.... இறுதியாக வந்தார்...... இன்று வருகிறார் நாளை வருவாரா என ஏங்கியது என் நட்புள்ளம்.... இன்றைய கணினி யுகத்தில் தொடர்பு கொள்ள சிரமமிருக்காது என்று மூளை சொல்லியும் மனம் ஏற்கவில்லை...... நாளை முதல் அந்த வெற்று இருக்கையை காணும் போதெல்லாம் மனம் தேடும் எங்கே என் தோழன் என........ பிரிவு உபச்சார நிகழ்வு முடிந்து விட்டது....... பிரிவு என்று முடியும்????????