Friday, March 14, 2008

பிரிவோம் சந்திப்போம்.........


ஒரு சில பிரிவுகளும் பிரிவின் பாதிப்பும் எளிதில் மறைந்து விடாது. அப்படி ஒரு பிரிவை பல வருடங்களுக்கு பின்பு இன்று சந்திக்க நேர்ந்தது. அது எங்கள் மேலாளர் திரு. கணேஷ் விருதகிரி அவர்களின் பிரிவு உபச்சார விழா. விழா என்று கூறுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் விழா என்பது கொண்டாட கூடிய ஒரு நிகழ்வு. வழக்கமான பிரிவு உபச்சார நிகழ்வை போல காணப்பட்டாலும் சில எதிர்பாராத ஆச்சரியங்களும் காத்திருந்தது. ஒவ்வொருவராக மேலாளரை பற்றி பேச பேச என் நினைவுகள் பின்னோக்கி சென்றவாறே இருந்தது. அவருடனான என் முதல் சந்திப்பு, நேர்காணல், ஆரம்ப கால நாட்கள் என நினைவுகளில் சிலாகித்து கொண்டிருந்தேன். திடீரென என் பெயரை யாரோ அழைப்பது போல் கேட்க நிஜவுலகிர்க்கு திரும்பினேன். வேறொன்றுமில்லை, இப்பொழுது என் முறை நான் பேச வேண்டும். நான் நிறைய பேசுவேன் எனினும் இப்பொழுது பேச இயலவில்லை. நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. அவருடனான என் நட்பு அவ்வளவு ஆழமானது, கொஞ்சம் வித்தியாசமானதும் கூட...... பொதுவாக நமக்கு பிடிக்காத சில விஷயங்கள் மற்றொருவரிடம் இருந்தால் நாம் அவர்களுடன் நட்போடு இருப்பது அரிது. அப்படியே இருந்தாலும் அது உண்மையான நட்பாக இருக்காது. ஆனால் எங்கள் நட்பு அவ்வாறு இல்லை....... சில விஷயங்களில் முரண்பட்டிருந்தாலும் அவற்றை விடுத்து எங்களுக்கு ஒத்து போகும் மாற்ற விஷயங்களில் ஒன்றாய் விவாதிப்போம். அப்பொழுதெல்லாம் எங்களுக்குள் இருக்கும் அந்த பிடிக்காத விஷயங்கள் நினைவில் வருவதே இல்லை..... இது அபூர்வம்தானே! இப்பொழுது மீண்டும் நிஜவுலகிருக்கு அழைக்கப்பட்டேன்........ நிறைய பேச ஆசையிருந்தும் பேச இயலாததால் "பொதுவாக எனக்கு கூட்டத்தில் அவ்வளவாக பேச வராது" என்று அப்பட்டமாக பொய் சொன்னேன். ஆனால் என் சினிமா கனவுகள் தெரிந்த என் நண்பர்கள் விடுவதாய் இல்லை, அவர்களுக்கு தெரியும் நான் பேச தயங்க மாட்டேன் என்று. ஒரு வழியாக பேசினேன்...... ஏதோ பேசினேன் என்றுதான் கூற வேண்டும். ஒரே ஒரு ஆறுதல் யாரும் கூறாத அவருடைய மனிதம் பற்றிய ஒரு விஷயத்தை கூறியது மட்டும்தான். ஆம்....... அவர் மக்களிடையே செத்து கிடக்கும் மனிதத்தை உயிர் பெற வைக்கும் ஆசை கொண்ட என்னை போன்ற மனிதர்களுள் ஒருவர். அது மட்டுமன்றி அவருடைய சரியான திட்டமிடுதல் அவருக்கே உரித்தான ஒரு திறமை. அவருடைய திட்டமிடுதலில் எனக்கு தெரிந்து எப்பொழுதும் தவறுகள் நேர்ந்ததில்லை. நான் பேசி முடிக்கும் வரை கேலியும் கூத்துமாக இருந்த எல்லோரும் என் சக பணியாளர் திரு.பாலகிருஷ்ணன் பேசும்பொழுது கூர்ந்து கவனித்தனர். பொதுவாக அவருக்கு சரியாக பேசவா தெளிவாக கூறவோ தெரியாது....... அவரை எல்லோரும் செய்த கிண்டல்கள் ஏராளம். ஆனால் அவருடைய இந்த்ற்றய பேச்சு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக தெளிவாகவும் அழகாகவும் தான் கூறவந்ததை சொல்லி முடித்தார். அவருடைய பேச்சுக்கு கைதட்டல் இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது ஆனால் இன்று அது கிடைத்தது. இப்பொழுது எங்களிடையே ஒரு வித அமைதி நிலவ தொடங்கியது. கேலியும், கூத்துக்களும் மறைய தொடங்கின. இப்பொழுது பேசியது தோழி ப்ரீதா....... அவள் பேசி முடிக்கும் பொழுது குரல் தழுதழுக்க எங்களிடையே ஒரு இறுக்கம் நிலவியது. நான் அந்த இறுக்கத்தை ரசித்து கொண்டிருந்தேன். அனைவரும் அவர்மேல் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடுதான் இந்த இறுக்கம் சூழ்ந்த அமைதி. கேலியும் கூத்துக்களும் காணாமல் போயிருந்தது இப்பொழுது. இறுதியாக அவர் பேசி முடிக்க, வழக்கமான பரிசளிப்புகளுடன் முடிந்தது.
மீண்டும் என் இருக்கைக்கு திரும்புகிறேன்..... ஆனால் அவர் இன்னும் வரவில்லை.... பொதுவாக எனக்கு பின்புறமாக நடந்து வந்து அவர் இருக்கைக்கு செல்வார்...... இன்று திரும்பி திரும்பி பார்க்கிறேன்.... இறுதியாக வந்தார்...... இன்று வருகிறார் நாளை வருவாரா என ஏங்கியது என் நட்புள்ளம்.... இன்றைய கணினி யுகத்தில் தொடர்பு கொள்ள சிரமமிருக்காது என்று மூளை சொல்லியும் மனம் ஏற்கவில்லை...... நாளை முதல் அந்த வெற்று இருக்கையை காணும் போதெல்லாம் மனம் தேடும் எங்கே என் தோழன் என........ பிரிவு உபச்சார நிகழ்வு முடிந்து விட்டது....... பிரிவு என்று முடியும்????????