Wednesday, March 4, 2009

பூரி கிழங்கு போடு!!!!!

ஹாலில் சோபாவில் ஹாயாக சாய்ந்து கொண்டு டி.வி பார்த்து கொண்டிருந்தான் பிரேம்.

"என்னங்க காலைல பூரி பண்ணிடுறேன்...... கூட கிழங்கு மசால் ஓகே தானே? " கேட்டாள் பிரேமின் மனைவி.

பிரேமின் மனதில் பிளாஷ்பேக் வேகமாக ஓடியது........

**************************************************

"மாப்ளே இதுக்கு மேல இத இப்டியே விட கூடாதுடா" என்றான் ரவி.

"இதாண்டா சரியான டைம்...... எல்லாரும் ரெடியா இருக்காங்க... சோ இப்போ நம்ம பண்ணத்தான் கரெக்டா இருக்கும்" இது சசி.

எல்லாவற்றையும் கூர்ந்து கேட்டு கொண்டிருந்த பிரேம் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. "ஒ.கே நைட் பத்து மணிக்கு பசங்கள நம்ம ஹாஸ்டல் மொட்ட மாடிக்கு வர சொல்லிடு. இன்னைக்கு நைட்டே பிளான் பண்ணிடலாம்".

இரவு பத்து மணி. மொட்டை மாடி.

நீண்ட நேர கலந்துரையாடலுக்கு பின்பு பிரேம் சொன்னான், "நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு எல்லாரும் டி.வி.எஸ் டொல்கேட் சிக்னல்ல ஸ்டார்ட் பண்றோம். எல்லாரும் கரெக்டா வந்திருங்க நம்ம யாருன்னு எல்லாருக்கும் காட்றோம்".

அப்பொழுது "மாப்ளே பேனர் ரெடி பண்ணனும்டா! அப்போதாண்ட மாப்ளே நம்ம வெயிட் காமிச்ச மாதிரி இருக்கும்! " என்றான் ரவி.

"சூப்பர் ஐடியாடா..... கலக்குரடா மாமு" என்று ஆமோதித்தான் சசி.

பிரேம் ஸ்டைலாக திரும்பி சொன்னான், "வாழ்க்கைல இப்போதண்டா உங்க வாய்ல இருந்து நாலு நல்ல ஐடியா வருது. ஒ.கே நாளைக்கு அடிக்கிறோம்.... கலக்குறோம்.....".

அடுத்த நாள். காலை ஒன்பது மணி. டி.வி.எஸ் டொல்கேட் சிக்னலை நோக்கி மாணவர் கூட்டம் படையெடுத்தது. அனைவரும் மொத்தமாக சென்று சிக்னலின் நடுவில் அமர்ந்து மறியல் செய்ய தொடங்கினர்.

அனைவர் கைகளிலும் "பூரி கிழங்கு போடு", "இனிமேல் போடணும் பூரி....... இல்லையெனில் நிரவ்கத்தை துப்புவோம் காரி...... ", "சத்து உள்ளது சப்பாத்தி....... அடைதி வழங்கி மாணவர் நலன் காப்பாத்து.......", இனிமேல் போடாதே இட்லி...... போட்ட நீ ஆகிடுவே சட்னி" என்று வித விதமான பேனர்கள். இது போதாதென்று கோஷங்கள் வேறு. அதுவும் எப்படி "இட்லி தோசை போடாதே..... பூரி கிழங்கு போடு......." என்று.

போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து விட்டது. பாவம் முக்கியமான சிக்னல் என்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னை, புதுகோட்டை, மதுரை, சென்னை என்று நான்கு முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் பிரியும் நான்கு சாலைகள் பிரியும் சிக்னல் அது. சிறிது நேரத்தில் காவல்துறையினர் பறந்து வந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் மாணவர்களிடம் பேசிய வண்ணம் இருந்தனர். ஆனால் ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி கேட்டார் "ஏன்பா தம்பிகளா இப்டி பண்றீங்க...... இதுக்கெல்லாமா மறியல் பண்றது..... பாவம் ஜனங்க அவஸ்தை படுறாங்கள்ள..... கலைஞ்சு போய்டுங்கப்பா". கூட்டத்திலிருந்து சசி வேகமாக எழுந்தான் "யோவ்.... உங்க வீட்ல வாழ்க்கை புல்லா இட்லி தோசை மட்டுமே காலைல போட்டா சாப்டு போயிடுவியா....... வக்கனயா கேள்வி மட்டும் கேக்குற?" என்றான்.

இன்னொரு போலீஸ் அதிகாரி சொன்னார், "மாணவர்களே உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்.... அடுத்த வாரம் முதல் உங்களுக்கு வெவ்வேறு வகையான காலை உணவுகள் வழங்கப்படும். நாங்கள அதற்கு உறுதி அளிக்கிறோம். இல்லையென்றால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திகொண்டிருப்பதால் உங்கள் மேல் தடியடி நடத்த வரலாம் மேலும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டி வரலாம். எனவே நீங்கள் இப்பொழுது அமைதியாக கலைந்து செல்லலாம்.".

ரவி மெதுவாக பிரேம் காதில் ஓதினான், "மாப்ளே நம்மள மிரட்டி பாக்குறாங்க....... இவிங்க நம்மள ஒரு மயிரும் புடுங்க முடியாது........ நம்ம மேல கை வைக்கவும் முடியாது..... கூட்டத்த கலச்சொம்னா அவ்ளோதான்...... நம்மள ஈசியா ஏமாத்திட்டு போய்டுவாங்க..... இன்னொரு நாளைக்கு ஒரு பயலும் வர மாட்டங்க எவனும் நம்மள மதிக்கவும் மாட்டாங்க....."

போலீஸ்காரர்கள் எவ்வளவோ பேசியும் பயனிருப்பதாக தெரியவில்லை. முடிவாக போலீசார் சொன்னார்கள், "உங்களில் யாரேனும் மூன்று பேர் மட்டும் எங்களுடன் வாருங்கள். நாங்கள் உங்களை கலெக்டரிடம் அழைத்து செல்கிறோம். அங்கு நீங்களே பேசி உங்கள் குறையை தீர்த்து கொள்ளுங்கள்.". இது ஓரளவுக்கு திருப்தியான பதிலாக தெரிந்ததால் மாணவர்கள் சற்றே யோசிக்க தொடங்கினர். பிரேம், சசி, ரவி மூவர் முகத்திலும் பிரகாசம் தெரிந்தது. அவர்கள் மூவரும் வருவதாக போலீசாரிடம் கூறினர்.

அவர்களை ஏற்றிக்கொண்டு வண்டி நேராக பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு போனது. மூவர் முகத்திலும் சற்றே பயம் வந்திருந்தது. உள்ளே ஒரு போலீஸ்காரர் கேட்டார், "இவிங்கதான சார் அவிங்க.... ரொம்ப வித்தியாசமான போராட்டமா இருக்கே..... இங்க உள்ள அனுப்புங்க அவிங்கள" என்றார்.

மூவரும் உள்ளே அனுப்ப பட்டனர். "இதுல யாருப்பா தலைமை, யாரு பொருளாளர் செயலாளர்?" என்றார்.

"விசாரிச்சோம் சார்.... பிரேம் தான் தலைவராம்" என்றார் இன்னொரு போலீஸ்காரர்.

"அய்யா பிரேம் இப்படி வாங்க...... இட்லி தோசையெல்லாம் சாப்பிட மாட்டீங்களா? பூரி கிழங்குதான் வேணுமோ? பின்னாடி திரும்புடா" என்று திருப்பி லத்தியால் நான்கு வாங்கு வாங்கினார்.

****************************************


பிரேம் அலறினான் "ஐயோ... அம்மா... பூரி கிழங்கேல்லாம் வேணம் சார்.... இட்லி தோசையே போதும்"

"இப்ப எதுக்குங்க இப்டி அலர்றீங்க? ஆமா என்னை எதுக்கு சார்னு சொன்னீங்க? அப்போ பூரிக்கு சென்னா மசாலா பண்ணிடவா?" என்று கேட்டாள் பிரேமின் மனைவி.

பதிலேதும் பேசாமல் விழித்தான் பிரேம்.................

1 comment:

Kamal said...

போலீசாவது லத்திலதான் அடிச்சாரு...
கலயாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி பண்ண....உனக்கு பூரிகட்ட அடிதாண்டி :))))))))