Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்


மம்மி, இன்டியானா ஜோன்ஸ் போன்ற பிரம்மாண்டமான படங்களை பார்த்து வியந்திருக்கும் எனக்கு அதுபோன்ற படங்களை நம்மாலும் நேர்த்தியுடன் உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்". இனி விமர்சனத்திற்கு வருவோம்........

சோழர்களின் காலத்தில் ஆரம்பிக்கிறது படம். பண்டைய சோழர் - பாண்டியர்களுக்கிடையே நடந்த ஒரு போரின்போது பாண்டியர்களின் குலதெய்வம் சிலை ஒன்றை கவர்ந்து கொண்டு வந்து விடுகின்றனர் சோழர்கள். மீண்டும் சிலகாலம் கழித்து அவர்களுக்கிடையே நடக்கும் போரில் பாண்டியர்களின் கைஓங்கி சோழர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் சோழன் தன் வாரிசான மகனை ஒருவரிடம் கொடுத்து சோழர் குலம் தழைக்கும் பொருட்டு யார் கண்ணிலும் படாமல் வேறு எங்கேனும் கொண்டு சென்று வளர்க்க சொல்கிறான். அவர்களுடன் பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையையும் கொடுத்து அனுப்பி விடுகின்றான்.

அதன் பின்பு வந்த பாண்டிய மன்னர்கள் எவ்வளவோ முயன்றும் சோழ வாரிசு சென்றடைந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இதானால் அவர்களின் குலதெய்வ சிலையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அதன் பின்னர் சில பாண்டியர்கள் சோழ வாரிசு இருக்கும் இடத்தை கணித்து செல்கின்றனர் ஆனால் அவ்வாறு சென்றவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. ஆனால் அந்த இடத்தை சென்றடயும் விதத்தையும் அதில் இருக்கும் கஷ்டங்களையும் ஓலைச் சுவடிகளில் எழுதி வைக்கின்றனர்.

இதன் பின்பு அந்த இடத்தை தேடி செல்லும் பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் உயிருடன் திரும்புவதில்லை. அந்த வகையில் இப்பொழுது நடப்பு காலத்தில் சென்ற ஒரு அகழ்வாராய்ச்சியாளர் ஒருவரும் காணமல் போகவே அவர் சம்பந்தப்பட்ட அந்த துறையின் உயர் பொறுப்பில் பணிபுரியும் அனிதா [ரீமாசென்] அந்த ஆராய்ச்சியாளரின் மகளுடனும் [ஆண்ட்ரியா] பாதுகாப்பு படையினருடனும் அந்த இடத்தை கண்டறிய புறப்படுகிறார். இவர்கள் மட்டுமில்லாது எடுபிடி வேலைகளுக்காக குப்பத்தில் திரியும் இளைஞர் குழு ஒன்றையும் கூடி செல்கிறார்கள். அந்த குழுவில்தான் நம்ம ஹீரோவும் [கார்த்தி] இருக்கிறார்.
வரைபடம் மற்றும் ஒலைசுவடிகளின் குறிப்புகள் மூலமாக அந்த இடம் வியட்நாம் என்பதை கண்டறியும் இவர்கள் அந்த நாட்டை நோக்கி கப்பலில் பிரயாணம் செய்கிறார்கள். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தீவைத்தான் அந்த சோழன் சென்றடைந்தான் என்று நம்பும் அவர்கள் படகுகள் மூலம் அந்த இடத்தை சென்றடைகின்றனர். ஆனால் கடலில் கரையை ஒட்டி இறங்கிய நொடியே கடலில் உள்ள விஷ மீன்களால் பலர் உயிரிழக்கின்றனர்
இதைப்போல் ஏழு இன்னல்களையும் தடங்கல்களையும் தாண்டிதான் அந்த இடத்தை சென்றடைய முடியும் என்று ஓலை சுவடியை படித்து சொல்கிறார் அன்றியா. அதேபோல் பல்வேறு இடர்களையும் இன்னல்களையும் தாண்டி பகீரத பிரயத்தனம் செய்து ஒரு வழியாக சோழன் இருந்த இடத்தை கண்டறிகின்றனர். அந்த இடத்தை அடைந்தால்தான் தெரிகிறது சோழன் சாகாமல் பல சந்ததிகளை உருவாக்கி அங்கு ஒரு சோழ ராஜ்ஜியமே நடந்து கொண்டிருக்கிறது என்று. ஆனால் அவர்கள் வளமான வாழ்வு வாழாமல் வெளி உலகுக்கே வராமல் வறுமையில் வாடி தவிக்கின்றனர். தற்போதைய சோழ மன்னன் [பார்த்திபன்] இன்னமும் பாண்டியர்கள் தங்கள் சோழ தேசத்தை அடிமை படுத்தி வைத்திருப்பதாகவும் ஒரு வேலை சோழர் ஆட்சி மீண்டும் வரபெற்றால் அங்கிருந்து ஒரு தூதுவன் வந்து அவர்களை மீண்டும் சோழ நாட்டிற்கு அழைத்து செல்வான் என்றும் மூதாதையோர் சொல்லியதை மனதில் வைத்து தூதுவனுக்காக காத்திருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அங்கு செல்லும் ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் கார்த்தி ஆகியோர் சோழர்களின் பிடியில் சிக்கி கொள்ள தான்தான் அந்த தூதுவர் என்று யாரும் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறார் ரீமாசென். ஆனால் உண்மையில் ரீமாசென் பாண்டிய குல வாரிசு என்பதும் அவர் அவர்களின் பரம்பரை சொத்தான நடராஜர் சிலையை மீட்கத்தான் வந்திருக்கிறார் என்பதுவும் நமக்கு தெரியும் போது தூக்கிவாரி போடுகின்றது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதை திரையரங்கில் சென்று கண்டு களியுங்கள்.........

என்னை பொறுத்தவரை படத்தின் ஹீரோ ரீமாசென்தான்........ சும்மா சொல்லகூடாது பின்னிருக்காங்க. பார்த்திபனுடன் இவர் ஆடும் மோகனர்த்தனம் அபாரம்........ பேச்சு நடை உடை பாவனை என அனைத்திலும் நம்மை கவர்கிறார்.......... அடுத்து பார்த்திபன்...... பார்த்திபனின் நடிப்புக்கு நல்ல தீனி போட்டிருக்கிறார் செல்வராகவன். மனிதர் முகபாவனைகளிலேயே உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார் மேலும் பழந்தமிழை தெளிவாக பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது. அடுதுதாங்க நம்ம கார்த்தி..... கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் அவருக்கான காட்சிகளும் முக்கியத்துவமும் குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது........ ஆண்ட்ரியா எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கிறார்..... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்........

பின்னணி இசையிலும் பாடல்களிலும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். "நில்லாடிய நிலம் எங்கே" பாடல் அற்புதம்....... மீண்டு சொந்த நாட்டை காண எங்கும் ஏக்கம் அழகாக சொல்ல பட்டிருகிறது........ ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் பாராட்டுக்கு உரியவர்.....கலை இயக்குனர், சண்டை பயிற்சியாளர், ஆடை அலங்கார நிபுணர் என எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..... இவர்களை எளிதில் பாராட்டிவிட்டு கடந்து போக முடியாது....... படத்தை பார்க்கையில் இவர்களின் உழைப்பு நிச்சயம் உங்களுக்கு தெரியும்........... படத்தின் இறுதி காட்சிகள் ஈழப்போரை நினைவு படுத்துகின்றன........ எளிதில் மறக்க முடியவில்லை :(

செல்வராகவனின் இந்த கற்பனைக்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்....... யோசிப்பில் மட்டுமில்லாமல் அதை படமாகுவதிலும் அதே முனைப்பை காட்டியிருப்பது தெரிகிறது.......... ஒரு சில லாஜிக் கேள்விகள் இருந்தாலும் தமிழனை உலகறிய செய்யும் இப்படத்தை உருவாக்கியதற்கு தமிழ் சினிமா என்றும் கடமைப்பட்டிருக்கிறது ...................

செல்வராகவன் "ஆயிரத்தில் ஒருவன்" படம் "ஆயிரத்தில் ஒன்று" !