படம் பார்த்து ரெண்டு வாரம் ஆச்சு.... ஆனா இன்னும் மனச விட்டு பிரியவே இல்ல...... சரி.... அப்போ விமர்சனம் எழுதிட வேண்டியதுதான்னு தோணிச்சு..... சும்மா சொல்ல கூடாதுங்க..... குடுத்த காசுக்கு மேலேயே சந்தோசத்தையும் நிறைவையும் தந்த படம்........ படத்த பத்தி பேசுறதுக்கு முன்னால சில இனைய தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் இந்த படத்த சிலர் படம் எடுத்தவருக்கு மேல விமர்சனம் பண்ணிருக்காங்க........ அதுல பாருங்க ஒருத்தர் சொல்றாரு, பருத்தி வீரன் படத்துல சின்ன சின்ன ரோல்ல நடிச்சவங்கல்லாம் கூட ரொம்ப நல்ல நடிச்சுருந்தாங்கலாம் ஆனா இந்த படத்துல அது ஒண்ணுதான் குறையாம்...... டேய் உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் என்னடா பிரச்சினைகள்? வீட்ல பிரச்சினை இருந்த வீட்டோட நிப்பாடிக்கங்கடா...... அத ஏன்டா வலைப்பதிவுக்கு கொண்டு வரீங்க? அவன் அவன் தமிழ்லையும் எவனாவது நல்ல எடுப்பானா எடுப்பானானு பார்த்து பார்த்து அத்தி பூத்த மாதிரி ஏதாவது ஒரு படம் வருது.... அதையும் படம் எடுத்தவனோட அதிகமா செலவு பண்ணி பார்த்த மாதிரி எழுதி தள்ள வேண்டியது......... சரி அத பத்தி பேசுனா நேரம்தான் விரயமாகும்..... முதல்ல சசி அண்ணாவுக்கும் சமுத்திரகனி அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்......... அண்ணன்மார்களே! நீங்களாவது தரம் கெட்ட சினிமாக்களை எடுக்காமல் இது போன்ற மேலும் பல நல்ல திரைப்படங்களை எடுக்க வேண்டுகிறோம்......
கதைக்கு வருவோம்...... சசி, விஜய்[சென்னை-28ல நடிச்சாரே அந்த விஜய்ங்க), பரணி (கல்லூரில நடிச்சவரு) மூணு பேரும் இணைபிரியா உயிர் நண்பர்கள்....... மூவரும் வெவ்வேறு லட்சியங்களுடனும் கனவுகளுடனும் இருப்பதை காட்டி ஆரம்பிக்கிறது படம்........ சசியின் அத்தை பொண்ணுக்கு சசி மீது கொள்ளை ஆசை........ ஆனால் அந்த பெண்ணின் அப்பாவுக்கோ மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகம் பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்........ அத்தை பெண்ணுக்காக தன குடும்பம் நல்ல வசதியான நிலையில் இருந்தும் சொந்தமாக எதுவும் தொழில் பண்ணாமல் அரசாங்க வேலைக்கான தேர்வுகளை எழுதி தள்ளுகிறார்.......... விஜய்க்கு சசியின் சகோதரி மீது காதல்....... இதற்கு விஜயின் அப்பாவும் உடந்தை....... பிறகென்ன ஊரிலேயே சொந்தமாக கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி ஆரம்பித்து விட்டால் தனக்கென்று ஒரு அந்தஸ்து வந்துவிடும் பின் முறையாக பெண் கேட்டு நல்ல விதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவாறே லோனுக்காக காத்திருக்கிறார்........ லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் அப்டீனு சொல்லுவாங்களே அந்த மாதிரி நம்ம பாண்டி. மனிதருக்கு ஒரு கவலையும் இல்லை......... நண்பர்களே உலகம் என்று அவர்களோடு வாழ்கையை கழித்து கொண்டிருந்தாலும் எப்படியும் துபாய் சென்று நன்றாக சம்பாதித்து வந்துவிட வேண்டும் என்பது இவரது ஆசை........
காதல், கலாட்டா கொஞ்சம் லட்சியத்தில் அக்கறை என்று அழகாக சென்றுகொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் வருகிறது ஒரு எதிர்பாராத ஒரு அதிரடி திருப்பம்....... சசியின் பழைய நண்பன் அதாவது அவரோடு ஊட்டியில் பள்ளியில் படித்த நண்பர் அவரை தேடி வருகிறார்........ அந்த பையனுடைய அம்மாதான் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வந்து இரண்டு நாட்களாக எதுவும் பேசாத அவர் அடுத்த நாள் திடீரென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அவரை காப்பாற்றி சசி காரணத்தை கேட்கையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஒரு பெரிய கோடீசுவரரின் மகளை காதலிப்பதும் அதற்கு அவரின் அம்மா சம்மதிக்காததும் தெரிய வருகிறது. நண்பன் மேல் கொண்ட பாசத்தில் சசி தான் அவர்களை சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்று என்னும் சசியின் நண்பர்கள் தாங்களும் உதவுவதாக உறுதியளிக்க அதே கையோடு நண்பர்கள் நால்வரும் நாமக்கல்லுக்கு கிளம்ப சூடு பிடிக்கிறது படம்...........
நாமக்கல்லில் உள்ள நண்பர் (கஞ்சா கருப்பு) ஒருவர் மூலம் பெண்ணின் அப்பாவையும் அவரின் பலத்தையும் பற்றி தெரிந்து கொள்கின்றனர். தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கையில் அந்த பையனின் அம்மாவும் நாமக்கல்லுக்கு வந்து விட அதிரடியான ஒரு திட்டத்தின் மூலம் அந்த பெண்ணை ஒரு கோவில் வீதியில் வைத்தே தூக்குகிறார். அந்த பெண்ணையும் பையனையும் வண்டியில் ஏற்றி காப்பாற்ற முயற்சிக்கும் இந்த பரபரப்பான காட்சியில் சசி தாக்கடுகிறார். இருந்தும் அவர்களை காப்பாற்றி கிளம்புகையில் அவரோடு வண்டியில் வந்து ஏறி கொள்ள ஓடி வரும் நண்பர்கள் இருவரில் ஒருவர் (விஜய்) காலை இழக்கிறார், இன்னொருவர் (பாண்டி) தலையில் அடிபட்டு அதனால் காது கேட்கும் திறனை இழந்து செவிடாகிறார். போகும் வழியிலேயே நண்பர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு காதல் ஜோடிகளை நேரே ஒரு கோவிலில் கொண்டு சேர்த்து அங்குள்ள ஒரு நண்பனின் உதவியோடு திருமணமும் செய்து வைத்து அவர்களை சென்னைக்கு அனுப்பியும் வைக்கிறார்.
பின்பு நண்பர்களை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல நண்பர்கள் இருவரின் நிலையையும் பார்த்து கதறி அழுகிறார். இவர்கள் இங்கு இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுக்க இவர்களை கைது செய்கிறது போலீஸ். போலீஸ் பல்வேறாக முயற்சித்தும் அவர்களிடமிருந்து காதல் ஜோடியயி பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சசியின் குடும்பத்தை தாக்குகிறார் அந்த பெண்ணின் தந்தை. ஒருவாராக ஜெயிலில் சில நாட்களை கடத்தி தங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் ஜெயிலில் இருந்து வெளியே வருகின்றனர். சசி ஜெயிலுக்கு சென்று வந்து விட்டதால் அவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்காது என்று அவரது மாமா தனது மகளுக்கு வேறொரு அரசாங்க வேலையிலுள்ள மாப்பிளைக்கு மணமுடித்து விடுகிறார். வாழ்வில் மேலும் மேலும் சோகம் சேர அவர்கள் வழக்கமாக அமர்ந்து பேசும் கடைகாரரின் மூலமாக நல்ல திருப்பம் ஆரம்பிக்கிறது. கல்யாண வேலைகளுக்கு சமையல் ஒப்பந்தம் செய்யும் வேலை கிடைக்க மூவரும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். விஜய்க்கு செயற்கை கால் பொருத்தப்படுகிறது பாண்டிக்கு காது கேட்கும் மெஷின் வர கொஞ்சம் தெம்பு வந்தவர்களாகின்றனர். இதற்கிடையே இவர்கள் மேல் பெண் வீட்டாரால் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்காக செல்லுகையில் மற்றொரு அதிரடி திருப்பம். உயிரை கொடுத்து சேர்த்து வைத்த காதல் கண்முன்னால் கேவலமான ஒரு காரணத்திற்காக பிரிந்து சென்றது மட்டும் இல்லாமல் அவர்கள் இருவரும் வேறு ஒரு திருமணத்திற்கு ஒப்பு கொண்ட சேதி அறிந்ததும் நண்பர்கள் கோபத்தின் உச்சிக்கு போய் இருவரின் வீடுகளுக்கும் சென்று அந்த பெண்ணிடமும் பையனிடமும் நியாயம் கேட்க போய் இருவராலும் அவமானப்படுத்தப் பட்டு திரும்புகின்றனர். நட்புக்ககாக வாழ்க்கையில ஏற்பட்ட இழப்புகளையும் வெறுப்புகளையும் எண்ணி ஆத்திரமடையும் அவர்கள் அந்த காதல் ஜோடியை கடத்தி வந்து கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அவர்களை கடத்தினார்களா? கொலை செய்தார்களா? இல்லை இவர்கள் எதுவும் ஆபத்தில் மாட்டி கொண்டார்களா? விறுவிறுப்பான இந்த உச்ச காட்சியை திரையில் கண்டு மகிழ்க..........
சசி படம் முழுவதும் அதிரடி நடிப்பால் கலக்குகிறார். "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா" என்று இவர் சொல்லும் இடங்கள் கை தட்டலை அள்ளும். பாடலில் நடனம் ஆடும் போது மட்டும்தான் இவர் தொழில்முறை கதாநாயகன் இல்லை என்பது நினைவுக்கு வரும் அளவிற்கு மற்ற அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகியாக வரும் அனன்யா பின்னி எடுத்திருக்கிறார். அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். இவர்களுக்கெல்லாம் மேல் சசியின் தங்கையாக வரும் அபிநயா, பெண்ணுக்கு காது கேட்காதாம் வாய் பேச வராதாம் ஆனால் இன்றைய தேதியிலிருக்கும் அனைத்து நடிகைகளையும் விட மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை மேலும் படங்களில் நடிக்க வைக்கலாம். விஜய் நிறைவாக செய்திருக்கிறார். சசியின் அப்பா, விஜயின் அப்பா, அனந்யாவின் அப்பா, பாண்டியின் அப்பா என எல்லா அப்பாக்களும் நடைமுறை வாழ்க்கையிலுள்ள வெவ்வேறு அப்பாக்களை அழகாக பிரதிபலித்துள்ளனர். கஞ்சா கருப்பு ஆங்காங்கே வந்தாலும் தவறாமல் சிரிக்க வைக்கிறார். நாமக்கல் பெண்ணின் அப்பாவாக வருபவரும் அற்புதமாக செய்திருக்கிறார். அவர் சசியை முதன் முதலில் பார்க்கையில் "தம்பிக்கு சௌத்சைடா" என்று கேட்கும் போது சசிக்கு மட்டுமல்ல நமக்கே நெஞ்சு பதைபதைக்கிறது. படத்தில் ஒரு அல்டிமேட் கேரக்டர் உண்டென்றால் அது அந்த அரசியல்வாதி அண்ணனாக வருபவரைதான் சொல்ல முடியும். "வாழ்விழந்த வாலிபர்களுக்கு வாழ்வளித்த வள்ளல்" என்று இவர் போஸ்டர் அடிக்கும் இடங்கள் சரவெடி சிரிப்பு.
பாண்டியை பற்றி தனியாக ஒரு விமர்சனமே எழுதலாம் என்கிற அளவுக்கு அலப்பரையாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அனந்யாவை சைட் அடிப்பதாகட்டும், நண்பர்களுடன் வரிந்து கட்டி கொண்டு இறங்குவதாகட்டும் கடைசியில் அனந்யாவின் தந்தையிடம் சசிக்காக சண்டை போடுவதாகட்டும் பிரமாதபடுத்தியிருகிறார். பாஸ்போர்ட் வெரிபிகேசனுக்காக பாண்டியை தேடி போலீஸ் வர அவரது அப்பா எங்கே பையன் ஏதோ தப்புதான் செய்திருப்பான் என நினைத்து போலீசிடம் பையனை கண்ணா பின்னவென்று திட்டுவதும் பின் விவரம் அறிந்ததும் அமைதியாகும் போது அவரை பார்த்து பாண்டி "இதுக்கு பேசாம சொத்துல விசத்த வச்சு கொன்றுலாம்ல" என்று கேட்கும் காட்சிகள் நெகிழ வைக்கும். கஞ்சா கருப்புவை இவை கலைக்கும் இடங்கள் அருமை. அவர் சசியை பார்த்து "நீ வலிச்சாலும் வலிக்கலேன்னுதானடா சொல்லுவ" என சொல்லும் இடம் சூப்பரோ சூப்பர்.
படத்தின் பின்னணி இசை பிரமாதம். சம்போ சிவ சம்போ பாடல் அதிர வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லா வசனங்களும் நினைவில் நிற்கிறது. ஒளிப்பதிவு படத்தொகுப்பு எல்லாமே கச்சிதம். படம் முடிந்து வெளியே வருவோரை பார்க்கையில் நெறஞ்ச மனசு எடுத்த சமுத்திரகனி இப்போதுதான் மனசுக்கு நிறைவாய் ஒரு படம் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.